Wednesday, August 7, 2013

சாதனைகள் பல - எம். பிரகாஷ் மும்பை







 
 
போலியோவால் பாதிக்கப்பட்டவர்
அரபிக் கடலில் 42 கிமீ தூரம் நீந்தி சாதனை செய்ய காத்திருக்கும் தமிழர்

மும்பையின் ஒர்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் எம். பிரகாஷ் (35) என்ற தமிழர், மார்ச் 8ம் தேதி அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார். கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து ராய்கட் மாவட்டம் ரேவாஸ் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரம் நீந்தி பிறகு அங்கிந்து திரும்புவார். இந்த 42 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரத்தில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். பிரகாஷ் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பாதிக்கப் பட்டவர்.

எனினும் தனது அயராத முயற்சியால் பல சாதனைகளை செய்துள்ளார். நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 81 தங்கம், 29 வெள்ளி மற்றும் 27 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, மும்பை-ரேவாஸ்-மும்பை ஸ்விம்மதான் போட்டியில் கலந்து கொண்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். ஒர்லி, மோதிலால் நகரில் உள்ள மதராஸ்வாடியில் பிறந்த பிரகாஷ், அங்கேயே வசித்து வருகிறார். அந்த பகுதியில் அரபி கடலில் கடக்கும் ஒரு சாக்கடை நீரில்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் நீச்சலை அவர் கற்றுக் கொண்டார்.

பின்னர் உள்ளூரில் நடந்த நீச்சல் போட்டி ஒன்றில் அவர் பங்கேற்றார். அதை நேரில் பார்த்த மூத்த போலீஸ் அதிகாரியான பாலாசாகேப் காட்கே (தற்போது உதவி போலீஸ் கமிஷனராக இருக்கிறார்) பிரகாசிடம் மறைந்து கிடக்கும் திறமையை கண்டு ஆச்சரியமடைந்தார். ஒர்லி, போலீஸ் முகாமில் உள்ள நீச்சல் குளத்தில் பிரகாஷுக்கு முறைப்படியான நீச்சல் பயிற்சி அளிக்க அவர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

தனது நீச்சல் திறமைக்கும், நீச்சல் போட்டிகளில் இத்தனை பதக்கங்கள் கிடைத்ததற்கும் போலீஸ் அதிகாரி காட்கேதான் காரணம் என்று பிரகாஷ் நன்றியுடன் குறிப்பிட்டார். மேலும் வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச பெண்கள் தினம் என்பதால் அந்த நாளில் இந்த உலக சாதனையை நிகழ்த்தி அதை தன் தாயார் எம்.பாலசுந்தரிக்கு அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பிரகாஷ் கடந்த 18 ஆண்டுகளாக நீச்சலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சுவாபிமான் சங்கட்டணா தலைவர் நிதேஷ் ராணே மற்றும் வருமான வரி கமிஷனர் வி.மகாலிங்கம் ஆகியோர் கொடுத்த ஊக்கம் காரணமாகவே வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைக்க உள்ளார்.

பிரகாஷுக்கு சத்யா என்ற மனைவி, 6 வயதில் ஹரிஹரன் என்ற மகன் மற்றும் 4 வயதில் வர்ஷினி என்ற மகள் உள்ளனர். நமது நாட்டில் கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகளுக்கு அவ்வளவாக ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்பது பிரிகாஷின் ஆதங்கம். அவர் இது பற்றி கூறுகையில், “கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகளுக்கு அதிகாரிகள் ஊக்கம் அளிப்பதில்லை. இது ஏன் என்று தெரியவில்லை.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் ஆண், பெண் உட்பட 2.20 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு வாயளவில் அனுதாபம் தெரிவிப்பதற்கு பதிலாக சிறிது ஆதரவு கொடுத்தாலே மிகப்பெரிய சாதனைகளை செய்து காட்டுவார்கள்என்றார்.
 
https://www.facebook.com/photo.php?fbid=553138558059099&set=a.198320656874226.47263.100000888786399&type=1&theater
 
Thanks to: 
 
 

No comments: