Thursday, November 26, 2015

அனுபவங்கள்- இன்றொரு தகவல்... - தன்னம்பிக்கையாளர்கள் – 1



                   
இன்று ( November 26, 2013 ) பணி நிமித்தமாய் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில்

1) கால் பாதிப்படைந்த ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர், விந்தி விந்தி நடந்துக் கொண்டிருந்தார். அவரை நிறுத்தி விசாரித்தோம். எம்.ஏ., பொருளாதாரம் படிப்பதாகவும், இன்று தேர்வுயெனவும், சேலத்திற்கு அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருவதாகவும் தெரிவித்தவரிடம், வாழ்த்துக் கூறி, தொடர்ந்து அவரிடம் தொடர்புக் கொள்ள, தொலைப்பேசி எண்களைக் கேட்டதற்கு, எம்மிடம் கைப்பேசியில்லை என்றதும், எமக்கு ஒரு வியப்பு. இவர் எம்மிடம் மறைக்கிறாரோ, விரும்பவில்லையோ என நினைத்து, கேட்டே விட்டேன். என்னப்பா சாதாரணமாக பள்ளிக் குழந்தைகளிடமே கைப்பேசி புழங்குகின்ற நேரத்தில், உன்னிடம் இல்லையென்கிறாயே.
எங்கள் குடும்ப வசதிக்கு, கைபோன் வைத்துக் கொள்ள இயலவில்லை. பொருளாதாரம் படிக்க வேண்டும் என்ற ஆவலினால், எம்.ஏ. பொருளாதாரம் படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றதும், எமக்கு மிக்க வருத்தமாகி விட்டது. அவரிடம் யாம் கூறியதற்கு வருத்தம் தெரிவித்ததுடன், வாழ்த்துக்களையும் கூறி, உதவிகள் தேவைப்படின் தயங்காமல் எந்த சமயத்திலும் முன்கூட்டியே தெரிவிக்கவும், முடிந்ததை செய்த உதவுகிறேனென சொல்லி, கல்லூரிக்கருகில் விட்டு விட்டு வந்தோம்.

சிறிது தூரம் வந்ததும், ஒரு கையிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர், அவரிடமும் பேச்சுக் கொடுத்தோம்.
2) சிறு வயதிலேயே வலது கையை விபத்தில் இழந்து விட்டதாகவும், 10ம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது ஒரு ஹார்ட்வேர் கடையில் வேலைப்பார்ப்பதாகவும், சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே அரசு வேலை எதுவாக இருப்பினும் உடனடியாக வாங்கி தந்து உதவும்படி கேட்டார், அத்துடன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வேலை கேட்க போவதாகவும் தெரிவித்தார். முதல்வரை ஒரு முறை சந்தித்து விட்டால் வேலை கிடைத்து விடும் என்றும் நம்புகிறார். ஒரு பக்கம் அவர் செயல்பாடும், சொற்களும் நகைப்பை ஏற்படுத்தினும், மற்றொரு பக்கம் அவர் அறியாமையைக் கண்டு மிகவும் வருத்தத்தையே ஏற்படுத்தியது. தற்போது இருக்கும் சூழ்நிலையை எடுத்துக் கூறி, வாழ்க்கைக்கு வருவாய், சில தொழிலுக்கான வழிமுறைகளை தெரிவித்து அனுப்பி வைத்தோம்.

அந்த நேரத்திலேயே கால் இழந்த ஒரு மாற்றுத்திறனாளியை சந்தித்தோம்.
3) மூன்று சக்கர மிதிவண்டியில் வந்தார். நடுத்தர வயதானவர். உடன்பிறந்தவர் யாருமில்லை. தாயும் இல்லை. வயதான தந்தை மட்டும் உடன் இருக்கிறார். வருமானம் அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை மட்டும். தந்தைக்கு முதியோர் உதவித்தொகை இதுவரை இல்லை. மூன்று சக்கர மிதிவண்டியும், செயற்க்கைக்காலையும் சேலத்தில் ஒரு அறக்கட்டளை மூலம் பெற்று இருக்கிறார். இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடு திகழ்கிறார். ஒரு டம் டீ கேன் ஒன்று யாரேனும் கொடுத்து உதவினால், பேருந்து நிலையத்தில் "டீ" விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டிக்கொள்வேன் என்றார். மிகவும் மகிழ்வாக இருந்தது.

இணையம்வழியாக தகவல் வெளியிட்டு உதவிப் பெற்றுத் தருகிறேன் என கூறி மேலும் தன்னம்பிக்கை அளித்து அனுப்பினோம்.

# யாரினும் உதவ விரும்பினால் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.


வணக்கம் நண்பர்களே!

ஆம்பல் மலர் வலைதளத்தில் November 26, 2013 ல் ·வெளியிடப்பட்டுள்ளது. இத்தளத்தில் விடுப்பட்டு விட்டதால், இன்று மீள்பதிவு செய்யப்பட்டது.

Wednesday, November 25, 2015

தன்னம்பிக்கையாளர்






சாதனையாளர் அல்ல தன்னம்பிக்கையாளர்.

Sunday, November 1, 2015

நீண்ட நாள் கோரிக்கை


சேலம் மாவட்டத்தில் 70க்கு மேற்பட்ட பார்வையற்ற ஆசிரியர்கள்  உள்ளனர். அதில் 10 பேர் கல்லூரி பேராசிரியர்கள்.

தமிழக அரசிடம் நீண்ட நாள் கோரிக்கைகள்:
1) மற்ற ஆசிரியர்களுக்கு கம்பியூட்டர் (கணினி) பயிற்சி அளிப்பதுபோல, பார்வையற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் (கணினி) பயிற்சி அளிக்க வேண்டும்.
2) பார்வையற்ற கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வு மேற்படிப்பை தொடர ஏதுவாக, வாசிப்பு உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள, ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. அதேபோல பார்வையற்ற பள்ளி ஆசிரியர்கள் மேற்படிப்பு தொடர, தமிழக அரசும் வாசிப்பு உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள நிதியுதவி செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்காக, ஐந்தாண்டுக்கும் மேலாக பலகட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இந்த நேரத்திலாவது எங்கள் கோரிக்கைகளை, முதல்வர் அவர்கள் தாயுள்ளத்தோடு ஏற்றுக் கருணை காட்ட வேண்டுமென, சேலம் மண்டல பார்வையற்ற ஆசிரியர்கள்  சங்க கிளை செயலாளர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 நாளிதழ் செய்தி. 24/10/2015

#எத்தனையோ இலவசங்கள். இது தேவையான முக்கிய உதவிதான். மனம் விசாலப்படவேண்டும்.

வாழ நினைத்தால் வழியாயில்லை - தன்னம்பிக்கை தகவல்.

கோவையில் துரைராஜ் என்பவர் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, ஒர்க் ஷாப்பில் 15 வருடம் வேலை செய்த அனுபவத்தினால், தனியாக ஒர்க் ஷாப் ஆரம்பித்து நட்டம் அடைந்தவர். ஒர்க் ஷாப் அருகில் மின்சார அலுவலகத்தில் (இ.பி. ஆபிஸில்) மின்கட்டணம் செலுத்த, மக்கள் வரிசையாக வெகுநேரம் காத்திருந்து சிரமபடுவதை பார்த்து, அவர்களுக்கு பதிலாக, மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களிடம் மின்கட்டணம் வசூலித்து, அவர்களுக்கு பதிலாக மின்சார அலுவலகத்தில் நாம் கட்டி, அதற்காக சிறு கட்டணமும் வசூலித்தால் அவர்களுக்கு சிரமமும், நேரமும் குறைந்து நமக்கு வருமானமும் கிடைக்குமென எண்ணி, தெரிந்தவர்களிடம் அட்டைகளையும் பணமும் பெற்று மின்சார அலுவலகத்திற்கு சென்று, நம்பிக்கையான முறையில் செயல்பட்டதினால், வாடிக்கையாளர்கள் பெருகினார்கள்.
அதேசமயத்தில் கணினி ஆன்லைன் மூலமாக மின்கட்டணம்      செலுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதை அறிந்து, கணினி ஆன்லைன் மூலமாக எப்படி மின்கட்டணம் செலுத்துவது என்பதை ஒருவரிடம் அறிந்துக்கொண்டு, இதுவரை பயன்படுத்தி வந்த டிவிஎஸ் 50யுடன் ஒரு   லேப்டாப் மற்றும் மின்கட்டணம் செலுத்தியதற்கான பில் (ரசிது) தருவதற்காக பிரிண்டரும் வாங்கிக்கொண்டதுடன், வங்கியில் கணக்கு துவக்கி, சிறிது பணம் போட்டுக் கொண்டேன்.
தற்போது 36௦௦ வாடிக்கையாளர்கள் உள்ளனர். மின்கட்டணத்தைக் குறிக்க மின்சாரவாரியத்திலிருந்து ஒரு குறிபிட்ட நாள் வருவதைப்போல  ஒவ்வொரு வீதிக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று, மின்கட்டணம் வசூலித்துக் கொண்டு, கணினி இண்டர்நெட் மூலம் பிரிண்டரில் உடனே பில் கொடுத்துவிடுவதால், ஆன்லைன் மூலமாக மின்வாரியத்துக்கு பணம் சென்று சேர்ந்து விடுகிறது. வசூலித்த பணத்தை அவ்வப்போது வங்கியில் செலுத்தி விட்டால் போதும்.
அதேபோல் வாடிக்கையாளருக்கு ஏற்றபடி அன்றைய நாள் முன்கூட்டியே நம் வங்கி கணக்கில் பணம் இருக்க வேண்டியது முக்கியம். வண்டியின் பெட்ரோல் செலவுக்கும், இண்டர்நெட் மற்றும் பிரிண்டர் செலவுக்காகவும் ஒரு பில்லுக்கு 10 ரூபாய் வசூலிக்கிறேன். மிகவும் சிரமப்படுபவர்கள் தெரிந்தால் அவர்களிடம் அதுவும் வாங்குவது இல்லை.
ஏரியாவுல இபி காரர்களுக்கு கடைசி நேரத்தில் வரிசை கட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து விடுதலை. மின்கட்டணம் செலுத்த  வேலைகளை விட்டுவிட்டு மழை, வெயில் என்று பாராமல் செல்ல வேண்டிய சிரமம் குறைவதால் வாடிக்கையாளருக்கும், 9வது மட்டும் படித்த எனக்கு இந்த வருமானத்தினாலும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.


#நீங்களும் முயற்சித்து, வருமானத்தை பெருக்கி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.