Wednesday, October 30, 2013

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை.



மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு, திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான விண்ணப்பிக்கும் காலம் கடந்து விட்டபடியால், அடுத்த 2014ம் ஆண்டு உயர்கல்வி பயலுபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவையான விபரங்கள் கீழே.

1) பிளஸ்2 பொது தேர்வில்,  1,200 மதிப்பென்களுக்கு 955 மதிப்பென்களுக்கு          மேல் பெற்றிருக்க வேண்டும்.

2) பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் 6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க                    வேண்டும்.

3) தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வேறு கல்வி உதவித்தொகைகள்  பெறக்கூடாது.

4) இத்திட்டத்தின் கீழ், தமிழக மாணவர்கள்  4,883 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் பெண்களுக்கும், மூன்று சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

5) தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும். ஆகவே தேசியமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கை துவக்கி, கணக்கு எண்,வங்கியின் பெயர், முகவரி, மாணவ, மாணவியரின் இ-மெயில் முகவரி, ஆதார் எண் (இல்லாதவர்கள், கீழ் காணும் விலாசத்தில் விசாரித்துக் கொள்ளவும்.) தொலைபேசி எண் முதலியவற்றை, தெரிவிக்க வேண்டும்.

6) மாற்றுத்திறனாளியாக இருப்பின், அதற்குரிய படிவத்தை, உரிய மருத்துவ அதிகாரியிடம் பெற்று அனுப்ப வேண்டும். 

7) சான்றொப்பமிட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேற்காணும் அனைத்து தகுதிகளும் பெற்றிருப்பின், அம்மாணவர்கள்,    கீழ்காணும் இணையதளங்களில் உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் ( டவுண்லோடு) செய்து, அப்படிவத்தை பூர்த்தி செய்து, மேற்காணும் சான்றுகளை இணைத்து ,

 "இயக்குனர், 
கல்லூரி கல்வி இயக்ககம்,
ஈ.வே.கி.சம்பத் மாளிகை,
9வது தளம், 
சென்னை- 600 006" 

என்ற முகவரிக்கு 2014ல் தேர்ச்சி பெரும் பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 


இணையதள முகவரிகள்:


 

**    தேவையானவர்கள், இத்தகவலை பத்திரபடுத்திக் கொள்ளவும்.  

Thursday, October 24, 2013

விழியற்றவரும் நெசவு செய்ய கைத்தறி.



பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நெசவு செய்ய கைத்தறியைக் கண்டு பிடித்துள்ளார், கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரில் பேராசிரியராக பணியாற்றும், பேராசிரியர் ராஜ்குமார் ரங்கநாதன்.

மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் என்ற இடத்தில் 'கிராமின் சராசிக் பிரதிஸ்தான்' என்ற அமைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, நெசவு நெய்யும் பயிற்சி அளிப்பதுடன்,வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. 

இங்கு 40க்கும்  மேற்பட்ட  பார்வையற்ற இளைஞர்கள், பழைய சேலைகளை 4 செ.மீ.,    அளவுக்கு ரிப்பனாக வெட்டி, கைப்பின்னல் முறையில் கையாலேயே தரைவிரிப்பு தயாரிக்கும் வேலை செய்கின்றனர். கைப்பின்னல் என்பதால், ஒரு நாளைக்கு,இரண்டு தரைவிரிப்புகளை தயாரித்து, 70 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டி, வறுமையில் வாடினர்.


அவர்களின் வறுமையைப் போக்க நினைத்த தொண்டு நிறுவனம், "ரூட் டேக்" என்னும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், கிராமிய தொழில் மேன்பாட்டுக் குழுவிடம் பார்வையற்றவர்கள், எளிதில் பயன்படுத்தி, தரை விரிப்பை தயாரிக்கும் விதத்தில், புதிய கைத்தறி இயந்திரத்தை கண்டு பிடித்து தர கேட்டுக் கொண்டனர்.

  கிராமிய தொழில் மேன்பாட்டுக் குழுவின் அறிவுறுத்தல் படி, சாதாரணமாக இருக்கும் கைத்தறியின் வடிவமைப்பை சற்று மாற்றி, எடை அதிகமுள்ள பகுதியின் எடையையும் குறைத்து, பார்வையற்றவர்கள் இயக்கம் வகையில் மாற்றியதுடன், பார்வையற்ற நேசவாலரை அழைத்து, எந்த சிரமமும் இல்லாமல் தறியை இயக்க முடிகிறதாவென சோத்தித்து, தேவைக்கேற்ப மேலும் மாற்றி இலகுவாக இயக்கும் வகையில்  தயாரித்துள்ளார்.


இவர் கண்டுபிடித்துள்ள கைத்தறியின் மூலம், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஆறு தரைவிரிப்புகளை தயாரிக்கலாம். அதனால் 70 ரூபாய் வருமானம் ஈட்டியவர்கள், இனி 250 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இப்பொழுது, அங்கு பணியாற்றும் அனைத்து பார்வையற்ற நெசவாளர்களுக்கும், கைத்தறி இயந்திரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

பார்வையற்றவர்களுக்கான கைத்தரியைக் கண்டுபிடித்துள்ள பேராசிரியர் ராஜ்குமார் ரங்கநாதன் அவர்களை நாமும் பாராட்டுவோம். அவரின் கண்டுபிடிப்பை வெளியிட்டு சிறப்பித்த புதியதலைமுறை இதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வோம். 

  

Wednesday, October 16, 2013

ஒரு வேளை சாப்பாட்டுக்கே

ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல், நடையாக நடந்து மயங்கி விழுந்து கிடக்கும்போது, யாரோ ஒரு வழிபோக்கன் மூலமாக ஒரு வாய் சாப்பாடு கிடைத்து. உயிர்பெற்று, உணர்வு பெற்றவர். இன்று இந்தியாவின் முக்கியமான V I P களின் சுப நிகழ்ச்சிகளின் கேட்டரிங் பொருப்பாளர். கோடிகளில் பட்ஜெட். எப்படி முடிந்தது. ஒரு சாதனையாளரின் வியத்தகு முன்னேற்றம்.. வெற்றி!
இந்த மாத படி நிகழ்வில் வரும் 20-ம் தேதி மாலை 5.30 மணிக்கு டிஸ்கவரியில்


Saturday, October 12, 2013

நல்வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும்,
சரஸ்வதி  பூசை,
ஆயுத பூசை
திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Friday, October 4, 2013

இலவச உதடு அறுவை சிகிச்சை (ஆபரேசன்)



உதடு மற்றும் வாய் பகுதியை ஒட்டிய பிளவுடன் தமிழ்நாட்டில், மாவட்டத்திற்கு 30 குழந்தைகள் வீதம் 1000 குழந்தைகளுக்கு , சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் , கல்வித்துறை சார்பில் இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூலமாகவும் பிறவகைகளிலும் இக்குறைப்பாடுள்ள குழந்தைகளைக் கண்டறியப் பட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணியை மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்  மேற்கொள்கிறது

 தனியார் மருத்துவமனையில் ரூபாய் 50000/= செலவு ஆகக்கூடிய  உதட்டு பிளவு அறுவை சிகிச்சை, இலவசமாக செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கான செலவை, அமெரிக்காவில் உள்ள 'ஸ்மைல்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்குகிறது.

இப்புதிய திட்டத்தின் செயல்பாடு குறித்து, ராமசந்திரா மருத்துவமனை வளாகத்தில் , 3/10/2013 அன்று நடைப்பெற்றது. இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 66 சிறப்பு ஆசிரியர்கள், மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சா ர்பில் 160 ஆசிரியர்களும் பங்கேற்றனர். வகுப்புகளில் இது குறித்த செய்தியை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், நாமும் நமக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து பயனடைய செய்வோம்.