Sunday, February 17, 2013

‘பிராக்டிக்கல்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு.



மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறை தேர்வர்களுக்கும் 10ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது என தமிழகப்பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணை: 
10ம் வகுப்பு தேர்வை, தனித்தேர்வாக எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறை தேர்வர்களுக்கும் அறிவியல் செய்முறைத்தேர்வில் விலக்கு அளித்து,   எழுத்துத் தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, அவர்கள் பெறும் மதிப்பெண்களை 100க்கு மாற்றி, வேறுப்பாட்டை, செய்முறை மதிப்பெண்களாக வழங்கலாம் என கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்து.
இந்த நிலையில் 75 மதிப்பெண்களுக்கு, 44 மதிப்பெண்களுக்கு,  அதிகமாக பெறும் தேர்வர்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதபடும். மற்றவர்கள் செய்முறைத்தேர்வில் தோல்வி அடைந்த்தாக கருதபடும். இது போன்ற நடைமுறை சிக்கல்களை களைய, செய்முறைத்தேர்வினையே ரத்து செய்ய கருத்துரை அரசுக்கு  கல்வித்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பொதுத்தேர்வை,எழுதிய தேர்வர்களுக்கு, எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் பதிந்து சான்றிதழ் வழங்கவும், செய்முறைத்தேர்வுக்கு விலக்கு அளிக்கவும்  இயக்குனர் அனுமதி கோரியுள்ளார். இயக்குனரின் கருத்துருவை பரிசீலனை செய்த அரசு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறை தேர்வர்களுக்கும் விலக்கு அளித்து உத்தரவிடுகிறது.
மேலும் கடந்த ஆண்டு ஏப்ரலில், பங்கேற்ற தேர்வர்களுக்கு, புதிய முறையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்க அரசு   உத்தரவிட்டுள்ளது. செய்முறைத்தேர்வில் இருந்து விலக்கு கோரும் தேர்வர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்களுடன், தேர்வுத்துறை இயக்குனருக்கு  விண்ணப்பித்தால், செய்முறைத்தேர்வுக்கு விலக்கு அளிக்க இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது சந்தேகங்கள் மற்றும் வேண்டுகோள்:
!) தனித்தேர்வாக எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமா? பள்ளியில் பயிலும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகையில்லையா?
2) சரியான விளக்கம் அரசாணையில் இல்லையா அல்லது செய்தி வெளியிட்ட நாளிதழில் விடுபட்டு விட்டதா? தெளிவு செய்யப்பட வேண்டும். ஏனென்றல் கல்வி அதிகாரிகளும் சரியான விளக்கமின்மையால் தவறான முடிவெடுக்க்க் கூடிய நிலையும், மாற்றுத்திறனாளிகளுக்கிடையே பேதத்தையும், தாழ்வு மானப்பான்மையையும் ஏற்படுத்திவிடும்.
3) மேலும் விரும்புகின்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் செய்முறைத்தேர்வுக்கு விலக்கு அளிக்க  அரசு   உத்தரவிட்ட வேண்டுமென தமிழக மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

உதவிக்கு மனமிருந்தால் போதும்.


எமது மனபூர்வமான வாழ்த்துக்கள்
விழியிழந்த வாலிபரை கைபிடித்து தேர்வெழுத அழைத்து வந்த கால்இழந்த பட்டதாரி மாணவர்

:டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல்நிலை தேர்வில், பங்கேற்க வந்த, பார்வை இல்லாத மாணவரை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் அழைத்து வந்தது, மனித நேயத்தை மலரச் செய்வதாக இருந்தது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1, முதல்நிலை தேர்வு, காரைக்குடியில், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, இன்ஜி., கல்லூரியில் நேற்று நடந்தது. இன்ஜி., கல்லூரியில் 400 பேரில், 250 பேரும், அரசு கலை கல்லூரியில் 347 பேரில் 181 பேரும் தேர்வு எழுத வந்து இருந்தனர். மேற்பார்வையாளர்களாக முதன்மை கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், வைரவன் செயல்பட்டனர். தேர்வெழுத வந்திருந்த விழியிழந்த பி.எட்., மாணவர் முத்துக்குமாரை, அவரது நண்பரும், கால் இழந்த மாற்றுத்திறனாளி மாணவருமான கே.ராஜா, தனது மூன்று சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.

முத்துக்குமார் கூறுகையில், ""சாதாரண விவசாய குடும்பத்தில், பிறந்த நான், இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன் என்றால், என் தாய், தந்தையரும், நண்பர்களுமே காரணம். தற்போது, அழகப்பா கல்லூரியில், பி.எட்., படித்து வருகிறேன். பாடங்களை "பிரெய்லி' முறையிலும், மாணவர்கள் சொல்வதை கேட்டும், சி.டி.,க்கள் வாயிலாகவும் படித்து வருகிறேன். கண்டிப்பாக இத்தேர்வில்,வெற்றி பெறுவேன். பார்வை இழந்த எனக்கு பார்வையாக இருப்பவர்கள் என் நண்பர்கள், என்றார்.

கே.ராஜா,மாற்றுத்திறனாளி: முத்துக்குமார் நன்கு படிப்பார். நான் மட்டுமல்ல, என்னுடன் பயிலும் அத்தனை மாணவர்களும், முத்துக் குமாருக்கு உதவி செய்வோம். எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.

நண்பர்களின் பயணம் தொடர்ந்து நட்புறவுடன், வாழ்வும் வெற்றிகரமாக அமைய எமது மனபூர்வமான வாழ்த்துக்கள்.

Friday, February 15, 2013

முன்சீப் கோர்ட் நீதிபதியாக...



கோவை மாவட்ட மூன்றாவது கூடுதல் முன்சீப் கோர்ட் நீதிபதியாக சக்ரவர்த்தி, 2009, ஜூன் 1ந் தேதி முதல் பதவிஏற்றுள்ளார். இந்தியாவிலேயே பார்வையற்ற ஒருவர், முன்சீப் கோர்ட் நீதிபதியாக பதவியேற்பது இதுவே முதல் முறை. பிறவியிலேயே கண் பார்வையில்லாத நிலையில், கேட்கும் திறன் அடிப்படையாகக் கொண்டு, தேர்வு எழுதி வெற்றிப் பெற்றுள்ளார். வக்கீலாக பணியை துவக்கிய சக்ரவர்த்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நீதிபதிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர்,கடந்த இரண்டு மாதங்களாக, கோவை மற்றும் வால்பாறை முன்சீப் கோர்ட்களில் பயிற்சிப் பெற்றுள்ளார். இவர், கோர்டில் வாதி, பிரதிவாதியின் வாதங்கள், சாட்சிகள், ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அத பின் கேட்புக் கருவிகளின் உதவியோடு கேட்டு, பின்பு தீர்ப்பு வழங்குவார். அவரைப் பற்றி மேலும் விவரங்களை கேட்டதற்கு, ஐகோர்ட்டில் அனுமதி பெற்ற பின் நிருபர்களை சந்தித்து, என்னைப் பற்றிய முழு விபரங்களை தெரிவிக்கிறேனென தெரிவித்துள்ளார். இவர் தனது உழைப்பால் தலைமை உயர்நீதிபதியாக வுப் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்.
http://aanandhamidhu.blogspot.in/2009/06/blog-post.html?showComment=1276944265885#c4126343099230053487

வேண்டுகோள் - வாழ்த்துக்கள்




இணைய இதய நட்புகள் அனைவருக்கும் வணக்கம்.

செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளியும் எமது நண்பருமான எம்.சின்னுசாமி, செவித்திறன் குறைந்தவர்களுக்கான சிறப்பு ஆசிரிய பட்ட படிப்பு B.Ed (Spl Edu in H.I )ல் 65% சதவிகித மதிப்பெண்கள் பெற்றுமுதல் வகுப்பில் (First Class) தேர்ச்சிப் பெற்றுள்ளார் என்பதையும், உதவியவர்களுக்கு எம் மற்றும் அவர் சார்பிலும் நன்றிகளை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் சங்கத்தில் அறிமுகமானபோது, B.Com முடித்து வீட்டில் இருந்தவரை, யான் தொடர்ந்து படிக்கத் தூண்டியதால், சென்னை ITIயில் Fitter (77%) மற்றும் CCA (Certificate in Computer Application and Accounting ) எனும் இரு பட்டையப்படிப்புகளையும் வெற்றிகரமாக முடித்து விட்டு, தொடர்ந்து மேற்பட்ட படிப்பு படிக்க விரும்பி எமை தொடர்புக் கொண்டார். FFF நிறுவனர் தம்பி வசந்தகுமாரை தொடர்புக் கொண்டு, FFF மூலம் M.Com. படிப்பிற்கும், சென்னையில் எமது நண்பர் பெரியவர் திரு. அனந்தபத்மனாபன் அவர்கள் மூலமாக B. Ed படிப்பிற்கும் உதவி பெற்றுக் கொடுத்ததில் சிறப்பான தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

தற்போதைய அவசர தேவைகள்:

1) செவித்திறன் குறைந்த, வசதி வாய்ப்புகளற்ற, தந்தையை சிறுவயதிலேயே இழந்து, வயதான தாயுடன் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான இவருக்கு, உடனடியாக வேலை தேவை.

2) M.Com. கடைசி வருட படிப்பிற்கு கல்லூரி கட்டணம் கட்ட ரூபாய் 2700/= (இரண்டாயிரத்து எழு நூறு ரூபாய்கள்)
கட்டணம் செலுத்த கடைசி நாள் 28/2/2013 ஆகும் விருப்பமுள்ளவர்கள், கொடையாளிகள் உதவ கேட்டுக் கொள்கிறோம்.

3) காது கேட்பதற்கு வசதியாக, செவிக்கு பின்புறம் பொறுத்தக் கூடிய அமைப்பில் உள்ள காதொலிக் கருவியை வழங்கி உதவும்படி கொடையாளிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

மாற்றுதிறனாளிகளுக்கு இலவச திருமணம் - பெயர் பதிவு


பெயர் பதிவு செய்துக் கொள்ள அழைப்பு.



சேலம் மாவட்ட உதவிகரம் நல்வாழ்வு சங்கம், மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. 

மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இலவச திருமணம் செய்துக் கொள்ள விரும்பினால், அவர்களில் யாராவது ஒருவர் மாற்றுதிறனாளியாக இருக்க வேண்டும். இவர்களுக்கு திருமணத்தின் போது பட்டுப்புடவை, பட்டுவேஷ்டி, தாலி (திருமாங்கல்யம்), மற்றும் சீர்வரிசைகள் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும். 




இலவச திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் மாற்றுதிறனாளிகள் வருகின்ற 2013, பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் சேலம் ஐந்து ரோடுக்கு அருகில் இருக்கின்ற கலைமகள் தெரு, சிவாம்பிகா பஸ் அலுவலக வளாகத்தில் உள்ள சேலம் மாவட்ட உதவிகரம் மாற்றுதிறனாளர் நல்வாழ்வு சங்க அலுவலகத்தில் பெயர் பதிவு செய்துக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 0427- 6503858 / 97891 78568 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாமென தெரிவித்துக் கொள்கிறார்கள்.

2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்துக் கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் தங்கள் இணைகளை (ஜோடிகளை) தேர்ந்தெடுத்துக் கொண்டு பதிவு செய்துக் கொள்வதுடன் கடைசி நேர சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.



இப்படங்கள் சென்ற வருடம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண விழா புகைப்படங்கள். கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.
 

Sunday, February 3, 2013

மாற்றுத்திறனாளியின் 42 ஆண்டு போராட்டம்

மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், வதோல் கிராமத்தை சேர்ந்த, வாய் பேச முடியாத, காது கேளாத 52 வயதான மாற்றுத்திறனாளி திலீப் பலராம். 10 வயது சிறுவனாக இருந்த போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இவர் மீது, லாரி மோதி, அவரது இடது கால் நசுங்கிப் போனது. மருத்துவமனையில் இடது கால் அகற்றப் பட்டு, முடமாகிப் போன திலீப் 13 ஆண்டுகளுக்கு பின்  ரூபாய் 2 இலட்சத்து 70 ஆயிரம் நிவாரணம் கோரி, 1983ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.



இதற்கிடையில் திலீப் சார்பாக ஆஜரான வக்கீல் பிரதீக் ஆச்சாரியா, 1990ம் ஆண்டு மரணமடைந்தார். லாரியின் உரிமையாளர் ஷாம் சிங்கும் இறந்து போனார். இதையடுத்து,  ஷாம் சிங்கின் மகங்கள் சந்தோக் சிங், ஹாம் சிங் ஆகியோர் வழக்கின் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர்.

பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்ட இருவரும், இன்ஷூரன்ஸ் கம்பெனி பிரதினிதியும் ஆஜராகாததால், அவர்களுக்கு எதிராக நேற்று முந்தினம் (1/2/2013) 42 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து தொடர்பாக, மோட்டார் வாகன விபத்து நிவாரண தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட  திலீப்புக்கு ரூபாய் 1 இலட்சத்து 69 ஆயிரம் நிவாரணத் தொகையை, 1983ம் ஆண்டு முதல் 6 சதவீத வட்டியுடன் சேர்த்துத் தர வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நெடிய போரட்டத்துக்கு பின் நிவாரணத் தொகைக்கான தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும் காலதாமதமாகமல் நிவாரணத் தொகை அவருக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

பார்வயற்ற இணை பேராசிரியர் முதலிடம்


தருமபுரி அரசுக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணி புரியும் கண் பார்வையற்ற கண்ணன் அவர்கள்,  கடந்த 2012 டிசம்பர் மாதம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பாக நடந்த  தேசிய அளவிலான கண் பார்வையற்றவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் ' எதிர்காலத்தில் வாய்ப்புகளும் சவால்களும் ' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

அது குறித்து கண் பார்வையற்ற இணை பேராசிரியர் கண்ணன் அவர்கள் கூறியதாவது:-
நான் தருமபுரி மாவட்டம் வேடியப்பன் திட்டை சேர்ந்தவன். பிறவியிலேயே கண் பார்வையில்லை. ஆனாலும் எனது பெற்றோர் கோபால், கண்ணம்மாள் ஆகியோர் என்னைப் படிக்க வைக்க ஆர்வம் காட்டினர்.

தொடக்கக் கல்வியை பர்கூர் ஐ.இ.எல்.சி. பார்வையற்றோர் பள்ளியிலும், தாம்பர கார்லி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வும், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ.,தமிழும், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பி.ஹெச்.டி. படித்தேன்.

கடந்த 1994டிசம்பர் 12ம் தேதி  தருமபுரி அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன். அன்றிலிருந்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்ததுடன், எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளையும், அதை அடைவதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தது வந்தேன்.

2010ம் ஆண்டு முதல் தமிழ்த்துறை இணை பேராசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. கடந்த 2012 டிசம்பர் மாதம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பாக நடந்த  தேசிய அளவிலான கட்டுரைப் போட்டிக்கு  'எதிர்காலத்தில் வாய்ப்புகளும் சவால்களும்' என்ற தலைப்பில் கட்டுரையை அனுப்பி வைத்தேன்.  இக்கட்டுரை தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்தது. அதற்கான சான்றிதழுடன் பரிசு தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கினர், என்றார்.

கல்லூரி முதல்வர்  (பொ)அன்பரசு, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுடன் நாமும் இணைந்து வாழ்த்துவோம்.