Sunday, February 3, 2013

பார்வயற்ற இணை பேராசிரியர் முதலிடம்


தருமபுரி அரசுக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணி புரியும் கண் பார்வையற்ற கண்ணன் அவர்கள்,  கடந்த 2012 டிசம்பர் மாதம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பாக நடந்த  தேசிய அளவிலான கண் பார்வையற்றவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் ' எதிர்காலத்தில் வாய்ப்புகளும் சவால்களும் ' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

அது குறித்து கண் பார்வையற்ற இணை பேராசிரியர் கண்ணன் அவர்கள் கூறியதாவது:-
நான் தருமபுரி மாவட்டம் வேடியப்பன் திட்டை சேர்ந்தவன். பிறவியிலேயே கண் பார்வையில்லை. ஆனாலும் எனது பெற்றோர் கோபால், கண்ணம்மாள் ஆகியோர் என்னைப் படிக்க வைக்க ஆர்வம் காட்டினர்.

தொடக்கக் கல்வியை பர்கூர் ஐ.இ.எல்.சி. பார்வையற்றோர் பள்ளியிலும், தாம்பர கார்லி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வும், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ.,தமிழும், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பி.ஹெச்.டி. படித்தேன்.

கடந்த 1994டிசம்பர் 12ம் தேதி  தருமபுரி அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன். அன்றிலிருந்து மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்ததுடன், எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளையும், அதை அடைவதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தது வந்தேன்.

2010ம் ஆண்டு முதல் தமிழ்த்துறை இணை பேராசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. கடந்த 2012 டிசம்பர் மாதம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பாக நடந்த  தேசிய அளவிலான கட்டுரைப் போட்டிக்கு  'எதிர்காலத்தில் வாய்ப்புகளும் சவால்களும்' என்ற தலைப்பில் கட்டுரையை அனுப்பி வைத்தேன்.  இக்கட்டுரை தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்தது. அதற்கான சான்றிதழுடன் பரிசு தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கினர், என்றார்.

கல்லூரி முதல்வர்  (பொ)அன்பரசு, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுடன் நாமும் இணைந்து வாழ்த்துவோம்.

No comments: