Thursday, April 11, 2013


நீங்களோ, உங்களை சார்ந்தவர்களோ ஊனமோ, உடல்நிலை பாதிப்போ ஏற்படின், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இப்படிதான் நடந்துக் கொள்வீர்களா? மனம் தொட்டு கூறுங்கள்.
மாற்றுத்திறனாளிகளின் பயணங்கள் குறித்து சிந்திக்குமா இந்தியா? (Will India implement UNCRPD?

மாற்றுத்திறனாளிகள், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்பது போன்ற செய்தி வெளியானது. மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகமானது 'மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் கடத்துகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியில் ஆபத்தான பொருட்களை மறைத்து எடுத்துச் செல்கின்றனர்' என்று குற்றம் சாட்டுகின்றது. மாற்றுத்திறனாளிகள் அவர்களது சொந்த சக்கர நாற்காலியைப் பயன்படுத்தக் கூடாது, விமானப் போக்குவரத்து பாதுகாப்புக் கழகம் வழங்கும் சக்கர நாற்காலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதி இருக்கிறது என்று வாதிடுகின்றனர்.

அவர்களிடம் சில கேள்விகள்:

1. இதுவரை எத்தனை முறை மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் கடத்தியுள்ளனர் என்று கூற முடியுமா?

2. கடந்த காலத்தில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் இவ்வகையான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளார்கள்?

3. சர்வதேச அளவில் எத்தனை முறை மாற்றுத்திறனாளிகள் இவ்வகையான குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகளை அளிக்க முடியுமா?

இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில் மாற்றுத்திறனாளிகள் மேல் குற்றம் சுமத்துபவர்களிடம் இருக்காது. தற்பொழுதுதான் மாற்றுத்திறனாளிகள் தங்களது அறிவின் துணை கொண்டு, ஆற்றலுடன் சமூக அவலங்களைத் தாண்டி உடற் குறைகளை பொருட்படுத்தாது,
உழைத்து வாழ்வில் முன்னேறி வருகின்றனர்.

அவர்களில் விமானப் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட தற்பொழுது அதிகரித்துள்ளது என்பது உண்மை. ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மிக மிக அதிகமானது. கம்பிக் கால்களை அணிந்து கொண்டு கைகளில் கோல்களை ஊன்றிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடந்து விமானப் பயணம் மேற்கொள்கின்றனர்.

உலோகங்களைக் கண்டறியும் கருவிகள் இவர்கள் அருகில் வந்தாலே ஒலி எழுப்புகின்றன. பலமுறை மாற்றுத்திறனாளிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளைக் களையச் சொல்லி உள்ளாடைகளுடன் நிறுத்தும் கொடுமைகள் பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் அரங்கேறி வருகின்றன. இவ்வகையான சோதனைகள் எல்லாம் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களுக்குக் கிடையாது.

(மத்திய அமைச்சர் ஜெயப்பால் ரெட்டி அவர்களை இவ்வாறு சோதனை செய்ய முற்படுமா மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம்?) மாற்றுத்திறனாளிகளின் தன்மானத்திற்கு எதிரான இவ்வாறான போக்குகள் அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கின்றன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் எனது நெருங்கிய தோழர் ஒருவருடன் பயணம் செய்த மாற்றுத்திறனாளி ஒருவரை மத்திய விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழக அதிகாரிகள் உள்ளாடைகளுடன் நிறுத்தி சோதனை செய்ததைக் கூறி மிகவும் வருத்தப்பட்டார். தனது வாழ்நாளில் தான் மிகவும் கொதித்து கோபப்பட்டு அந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறினார். மாற்றுத்திறனாளிகள் பல இடஙகளில் இது போன்று அதிகார வர்கத்தினரால் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கொல்கத்தாவில் ஜீஜா கோக் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியையை ஸ்பைஸ் ஜெட் என்ற தனியார் நிறுவன விமான ஓட்டி, விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுத்துவிட்டார். இவர்களைப் போன்றவர்கள் விமானத்தில் பயணம் செய்யத் தகுதியற்றவர்கள் என்று கூறி அந்த ஆசிரியையை இறக்கிவிட்டுவிட்டார். அந்த ஆசிரியை பலமுறை உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர். ஆனாலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்றே சென்னையைச் சேர்ந்த டாக்டர்.தீபக் என்பவரை சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்ற மறுத்த செய்தி சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. தொடர்ந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக இவ்வாறான செய்திகள் மாற்றுத்திறனாளிகள் சந்தித்து வரும் பிரச்சினைகளை வெளிக் கொணர்வதாக இருக்கின்றது. மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள், அவர்களின் சமூக வாழ்வுரிமைகள் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

எனது தோழர் ஒருவர் கூறிய ஒரு சம்பவம். மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவருக்கு விமானத்தின் பின் பகுதியில் (வால் பகுதியில்) 29சி என்ற எண் கொண்ட இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. (விமானத்தின் வால் பகுதியில் சிவப்பு நிறத்தில் இருக்கைகள் குறிக்கப்பட்டுள்ளது) பல பெரிய விமானங்களில் முன்புறமும் பின்புறமும் ஏணிகள் இணைக்கப்பட்டு விமானத்தினுள் பயணிகள் ஏறும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த விமானமானது, பயணிகளை விமானப் பாலத்தின் ஊடாக ஏற்றவும் இறக்கவும் வழி வகை செய்யப்பட்டிருந்தது. அவ்வாறாக விமானத்தின் முன்புறத்தை பாலத்துடன் இணைத்து பயணிகளை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

இரண்டு கால்களும் செயல் இழந்த அந்தப் பெண் ஊன்றுகோல்களின் உதவியுடன் விமானத்திற்குள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் சென்றால் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் இருக்கையானது விமானத்தின் மறுகோடியில் உள்ளது. மிகவும் குறுகலான அந்த இடைவெளியில் தனது ஊன்று கோல்களுடன் அந்தப் பெண் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தை அடைவது என்பது மிகவும் கடினமானது. எனது தோழர் விமான அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

விமானப் போக்குவரத்து நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த இருக்கைதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது- நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று கூறியிருக்கின்றனர். அவ்வாறான இருக்கையை அடைவதற்கு அவருக்கு ஏணி வசதிகள், அல்லது லிப்ட் வசதி செய்து தரப்பட்டிருந்தால் மட்டுமே அவர் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 29சி என்ற இருக்கையை அடைய முடியும். அவ்வாறு நீங்கள் செய்து தரவில்லை, எனவே விமானத்தின் முன் இருக்கையை அவருக்கு ஒதுக்கிக் கொடுங்கள் என்று பலவிதங்களில் எடுத்துக் கூறி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளியின் உரிமைக்குப் போராடும் தோழரின் கடுமையான வாக்குவாதங்களால் வேறு வழியில்லாமல் இடம் ஒதுக்கித் தரப்பட்டது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

அவ்வாறான ஒரு போராட்டம் இல்லையென்றால் அந்த மாற்றுத்திறனாளிப் பெண் அனுபவித்திருக்கும் கொடுமைகளுக்கு யாராலும், எந்த வார்த்தைகளாலும் ஆறுதல் சொல்ல இயலாது.
சென்னையைச் சேர்ந்த திரு.தீபக் அவர்கள் அமெரிக்கா சென்ற பொழுது அவர் இரண்டு ஊன்றுகோல்களுடன் விமானத்தில் இருந்து எழுந்தவுடன் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறப்பு மின் தூக்கி உதவியுடன் அவர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார். அவர் நான்கு சக்கர வாகனத்தில் ஏறி விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதுவரை விமான நிலைய ஊழியர்கள் உதவினார்கள் என்பதை ஒரு முறை நினைவு கூர்ந்தார். அனைத்து விஷயங்களுக்கும் அமெரிக்காவை அடியொற்றி நடக்கும் இந்திய நாடும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மனித உரிமையாகக் கருதி பணியாற்றிடலாமே.

1986-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அவர்கள் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார் (U.S. Air Carrier Access Act 1986) அச்சட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் சந்தித்துவந்த அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தன. இது போன்ற ஒரு சட்டத்தை இந்திய அரசால் நிறைவேற்ற இயலாதா?

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் United Nations Convention on Rights of Persons with Disabilities (U.N.C.R.P.D.) அக்டோபர் 1-ம் தேதி 2007-ம் ஆண்டு கைச்சாத்திட்டது. அத்துடன் அதை மறந்தும் போய்விட்டது. சின்னஞ் சிறிய நாடான மலேசியா மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தத்தக்க வகையில் தனது விமான நிலையங்களையும், விமானத்தில் பயணிகள் பயன்படுத்தும் பாதையையும், சிறப்பு மின் தூக்கிகளையும் பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் எவ்விதமான சிரமங்களும் இன்றி விமானங்களில் பயணித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் மக்கள் தொகையில் உலகில் முதல் நாடான இந்தியா அவர்களைப் பற்றி எப்பொழுது சிந்திக்கும்? எமது பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்காது மாற்றுத்திறனாளிகள் ஆயுதங்கள் கடத்துகின்றனர், வெடிப் பொருட்களை அவர்களது சக்கர நாற்காலிகளினூடாக கடத்துகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது வேதனையாக இருக்கின்றது.

நன்றி: கீற்று


http://www.facebook.com/photo.php?fbid=550658218307133&set=a.198320656874226.47263.100000888786399&type=1&theater

No comments: