Wednesday, January 20, 2016

தளராத மாற்றுத்திறனாளி – இன்றொரு தகவல்



இன்றைய நாளிதழை வாசித்துக்கொண்டு இருந்தபோது, மனது பழைய நினைவுகளில் ஒன்றுக்கு தாவிவிட்டது. சுமார் 9 வருடங்களுக்கு முன் சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரில் மேடுபள்ள சாலையில் கால்கள் செயலிழந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் சுமார் 16 வயதுள்ளவன், மூன்று சக்கர வண்டியில், ஒரு சிறிய மூட்டையை வைத்துக் கொண்டு, சிரமத்துடன் வந்துக்கொண்டு இருந்தான்.

அவனை விசாரித்தபோது, கோலமாவு விற்பனை செய்வதாக கூறினான். வருமானம் குறைவுதான். குடும்பம் ஏழ்மையில் இருப்பதால், தானும் பாரமாக இருக்க விரும்பாமல், என்னால் முடிந்த வருமானத்தை ஈட்டி குடும்பத்திற்கு கொடுப்பதாக கூறினான். மனம் கனத்து விட்டது. ஒரு பக்கம் அவனை நினைத்து பெருமையும் அடைந்தேன். பச்சாதாபமாக பேசி, தன்னிரக்கம் அடைய செய்யக்கூடாதென நினைத்து, பாராட்டியதுடன், விற்பனையை அதிகரிக்க சில யோசனைகளையும் தெரிவித்தேன்.

1) எத்தனையோ விழாக்களுக்கு வண்ணக் கோலப்பொடி தேவையுள்ளதால், அதை இத்துடன் சேர்த்து விற்கலாம். பாரம் ஒன்றும் அதிகமில்லை. பாக்கெட்டுகளில் உள்ளதையோ, மொத்தமாக வாங்கி, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்கலாம்.

2) கோலப்பொடி தினமும் எல்லோரும் வாங்கபோவதில்லை. எனவே மாற்று விற்பனையாக நல்ல தரமான லோக்கல் பெனாயில், சேம்பு, சோப்புத்தூள், ஆசிட் போன்றவற்றை வாங்கியோ, தயாரித்தோ விற்கலாம்.

3) ஒரு பகுதியில் (ஏரியாவில்) ஒரு நாள் கோலப்பொடி, மறுநாள் மாற்றுப் பொருட்கள் என விற்பனை செய்தால் வருமானம் கூடும்.

4) முக்கியமாக பொருட்களாக இருந்தாலும், மற்றவர்கள் விற்பதை விட நாம் தரமானதாக விற்க வேண்டும்.

5) வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கு, கடைகளில் விற்பதை விட சிறிது குறைவாக விற்றால், உன்னிடம் தவறாமல் வாங்குவார்கள்.

6) பொருட்கள் மொத்தமாக வாங்கி பேக் செய்தாலும், பெனாயில், சேம்பு தயாரித்தாலும், கடைகளுக்கும் போடலாம்.

7) மிக முக்கியமானது: வருகின்ற வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, வங்கியில் சேமிக்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை தேவைக்கு ஏற்ப தொழிலில் முதலீடு செய்ய வேண்டும். மற்றதைதான் குடும்ப செலவு செய்ய வேண்டும். அதிலும் அனாவசிய, ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். நல்ல உடல் நிலையுடையவர்களே தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, குடும்பம், உடல் நிலை சீர்கெட்டு அவதிபடுகிறார்கள். அதனால் மாற்றுத்திறனாளிகள் எந்த ஒரு தீய பழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருந்தால், தற்போதுள்ள சிரமம் கூடுதலாகாமல் இருக்குமென அந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு, நீண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விட்டு, தேவைப்பட்டால் தொடர்புக்கொள்ள சொல்லி விடைப்பெற்றேன்.

8) அந்த சமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மோட்டார் ஸ்கூட்டர்கள் அரசு சார்பில் வழங்கப்படாததால், அதைக்குறித்து அவனுக்கு சொல்லவில்லை.

மற்றொரு சமயம் அந்த மாற்றுத்திறனாளி சிறுவன், எனை சந்தித்து தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தது, எமக்கு ஆனந்தம் அளித்தது. எதற்காக இன்று அவனைப்பற்றி இவ்வளவு என நினைக்கிறீர்களா?

#சமிப சென்னை பெருவெள்ளத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் நிலை என்னவோ? ஏனென்றால் அவனிருக்கும் குடிசை பகுதி அப்படி.

No comments: