Wednesday, December 4, 2013

பாறைகளையும் உடைத்து முளைக்கும் விதைகள்.


பொது நூலக துறையில் முதன் முறையாக இளநிலை உதவியாளராக பார்வையற்றவர் நியமனம்

கோவை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, பார்வையற்ற வாலிபர், பொது நூலகத் துறையில், இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர், முத்து வெங்கட சுப்பிரமணியம், 21. பார்வையற்ற இவர், 2012, ஜூலை, 13ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, கோவை மாவட்ட மைய நூலக அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக, அக்., 17ம் தேதி பணியில் சேர்ந்தார்.

வரலாற்றில், இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ள, முத்து வெங்கட சுப்பிரமணியம் கூறியதாவது:

அரசுத் துறையில், பணியில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என் தந்தை காலமாகி விட்டார். அதனால், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். பத்திரிகைகளை தினமும், பிறர் உதவியுடன் வாசிப்பேன். அதுவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், வெற்றி பெற உதவியாக இருந்தது.

பார்வையில்லை என்பதால் சிரமப்பட்டு இருக்கிறேன் என்பது உண்மை. ஆனால், இதுவரை வருத்தப்பட்டதில்லை. என்னை போன்றவர்கள் வீட்டில் முடங்கி விடாமல், கல்வி என்ற ஆயுதத்தை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன் கூறியதாவது:

முத்து வெங்கட சுப்பிரமணியத்திற்கு தற்போது, சீல் வைப்பது, படிவங்களை ஒருங்கிணைத்து கட்டுவது போன்ற சிறு சிறு வேலைகள் கொடுக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கென, பிரத்யேக நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த நூலகத்தில், விரைவில் இவர் பணி அமர்த்தப்படுவார்.

பொது நூலகத் துறையில், பார்வையில்லாத ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது மாநிலத்தில் இதுவே, முதன்முறை.
இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.
 — with Dhavappudhalvan Badrinarayanan A M.

No comments: